பெங்களூரு மருத்துவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியது எப்படி? ... வெளியான புதிய தகவல்கள்!
இந்தியாவில் முதல்முறையாக ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத பெங்களூரு மருத்துவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியது எப்படி என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் எனும் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், தென்னாப்பிரிக்காவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. மேலும் அது டெல்டாவை விட கொடியது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா 8 முறை உருமாற்றமடைந்தது. ஆனால் இந்த ஒமிக்ரானோ 32 முறை உருமாற்றமடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டன. இதுவரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய ஒமிக்ரான் இந்தியாவில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பரவியது தெரியவந்தது.
வெளிநாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு வந்தவர் மற்றும் பெங்களூரை சேர்ந்த மற்றொருவர் ஆகிய இருவருக்கு ஒமிக்ரான் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த இருவரில் ஒருவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவர் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை என விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் அவருக்கு எப்படி ஒமிக்ரான் பரவியது என சுகாதாரத்துறை அதிகாரிகள் குழப்பமடைந்தனர். ஒரு வேளை ஒமிக்ரான் லோக்கல் பரவலாக மாறிவிட்டதோ என சுகாதாரத்துறை அதிகாரிகள் நினைத்து அச்சமடைந்தனர்.
பின்னர் விசாரணையில் ஒமிக்ரான் பாதித்த மருத்துவர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற்ற மருத்துவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்தது.
அதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டனர் என்பது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட மருத்துவர் மாநாட்டின் கடைசி நாளில்தான் பங்கேற்றார்.
அதற்கு அடுத்த நாளே மருத்துவருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டதாக தெரிகிறது. உடனடியாக அவர் கொரோனா பரிசோதனை செய்ததில் மருத்துவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த மாநாட்டில் இருந்து அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தார்கள்.
எனினும் உடலில் வைரஸ் நுழைந்த மறுநாளே அதற்கான அறிகுறிகள் தென்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பொதுவாக உடலில் ஒரு ஃபாரின் பாடி சென்றால் அது குறித்த அறிகுறிகள் வெளியே தெரிய 5 நாட்களாகும்.
ஆனால் மருத்துவருக்கு எப்படி மறுநாளே தெரிந்தது என தெரியவில்லை. இதனால் அவருக்கு ஒமிக்ரான் எப்படி பாதித்திருக்கும் என்பதை அறிய சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட மருத்துவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் மருத்துவருக்கு 13 முதல் நிலை தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. 205 இரண்டாம் நிலை தொடர்பு இருந்துள்ளது.
இதையடுத்து 13 முதல்நிலை தொடர்பு உள்ளவர்களை சோதனை செய்ததில், 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த 3 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என அறிய மரபியல் பரிசோதனை செய்யப்படுகிறது.